நெல்லையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும்-மேயரிடம் பொதுமக்கள் மனு
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நெல்லையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டுமென்று பொதுமக்கள் நேற்று மேயரிடம் மனு கொடுத்தனர்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நெல்லையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டுமென்று பொதுமக்கள் நேற்று மேயரிடம் மனு கொடுத்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள்
நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், ரேவதி, மகேஸ்வரி, கதிஜா இக்லாம் பாசிலா, நகர்நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன், உதவி ஆணையாளர்கள் லெனின், பைஜூ, உதவி செயற்பொறியாளர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நெல்லை சந்திப்பு உடையார்பட்டி, மேகலிங்கபுரம் பகுதி மக்கள், கவுன்சிலர் கோகிலவாணி சுரேஷ் தலைமையில் மாநகராட்சியில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், நெல்லை சந்திப்பு, உடையார்பட்டி, மேகலிங்கபுரம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் அதிகளவில் நடமாடுகின்றன. எனவே பொதுமக்களை அச்சுறுத்திவரும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்திப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடை தூர்வாரப்படாமல் தேங்கிய நிலையில் காணப்படுகிறது. எனவே அதை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
குடிநீர் வசதி
நெல்லை டவுன் பாரதியார் தெரு மக்கள், கவுன்சிலர் சந்திரசேகர் தலைமையில் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை டவுன் பாரதியார் தெருவில் குடிநீர் இணைப்பு பழுதடைந்துள்ளது. குடிநீர் தேக்கி வைக்கும் தொட்டி சுகாதாரமற்ற முறையில் உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும். மாநகராட்சி பள்ளியில் இடப்பற்றாக்குறையால் சுமார் 230 மாணவிகள் பாரதியார் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி செய்யப்பட வேண்டும். மேலும் பள்ளியில் மின் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பாளையங்கோட்டை பகுதி மக்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள் அன்பு அங்கப்பன், மாரியம்மாள் ஆகியோர் தலைமையில் வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பஸ் நிறுத்தம் அருகே வாகன காப்பகம் அமைத்து தர வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பூங்கா அமைக்க வேண்டும். விஸ்வசூர்யா நகரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். 9-வது வார்டு அசோக் தியேட்டர் அருகே குப்பைகளை அகற்ற வேண்டும். பாளையங் கால்வாய் பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
வியாபாரிகள் சங்கம்
நெல்லை வியாபாரிகள் சங்கத்தினர், நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு புதிய சாலை அமைத்து தர வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
இதேபோல் சாலை வசதி, தெருவிளக்கு வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியவை செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் மனு கொடுத்தனர்.