பெதப்பம்பட்டியில் புறக்காவல் நிலையம்
பெதப்பம்பட்டியில் புறக்காவல் நிலையம்
குடிமங்கலம்
பெதப்பம்பட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புறக்காவல் நிலையம்
குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 83 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் குடிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளாகும். குடிமங்கலம் போலீஸ் நிலைய எல்லைகளாக தாசர்பட்டி, புதுப்பாளையம், சின்னவீரம்பட்டி, நெகமம் உள்ளன குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், .30 போலீசார் பணிபுரிந்து வருகின்றனர்.
குடிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எல்லைகள் நீண்ட தொலைவில் உள்ளன. மேலும் கிராமப்புறங்களில் மக்கள் தொகையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பொள்ளாச்சியில் இருந்தது தாராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உடுமலையில் இருந்து திருப்பூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை குடிமங்கலம் வழியாக செல்கிறது.இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்களும் அதிக அளவில் செல்கின்றன. தாராபுரத்தில் இருந்து குடிமங்கலம், பெதப்பம்பட்டி வழியாக கேரளாவிற்கு அதிக அளவில் வாகனங்களும் செல்கின்றன. மாநில நெடுஞ்சாலை என்பதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது பகல் மட்டுமின்றி இரவு நேர ரோந்து பணிக்காக போலீசார் பயன்படுத்தப்படுகின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
பெதப்பம்பட்டி மற்றும் குடிமங்கலம் பகுதிகளில் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வங்கிகள், மின்வாரிய அலுவலகம், ஒன்றியஅலுவலகம் இயங்கி வருகின்றன.கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினமும் பெதப்பம்பட்டிக்கு வந்து செல்கின்றனர். இது தவிர கிராமப்புறங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் குற்றச் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்து செல்லவும் காலதாமதம் ஏற்படுகிறது. குடிமங்கலம் போலீஸ் நிலைய எல்கை நீண்ட தூரம் உள்ள நிலையில் போலீசாரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே பெதப்பம்பட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
----
Reporter : N.Sivananthakumar Location : Tirupur - Udumalaipet - Kudimangalam