தேடப்படும் வாலிபர் பாலக்காட்டில் பதுங்கல்?


தேடப்படும் வாலிபர் பாலக்காட்டில் பதுங்கல்?
x
தினத்தந்தி 4 May 2023 1:30 AM IST (Updated: 4 May 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தேடப்படும் வாலிபர் பாலக்காட்டில் பதுங்கி உள்ளாரா என தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தேடப்படும் வாலிபர் பாலக்காட்டில் பதுங்கி உள்ளாரா என தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கல்லூரி மாணவி கொலை

கோவை மாவட்டம் இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 20). இவர் தனியார் கல்லூரியில் பி.காம். தகவல் தொழில்நுட்பம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்கிடையில் நேற்று முன்தினம் பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி கவுரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுப்புலட்சுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மகாலிங்கபுரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த சுஜய் (27) என்பவர் சுப்புலட்சுமியை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.

தனிப்படை அமைப்பு

இதைத்தொடர்ந்து தலைமறைவான சுஜயை பிடிக்க வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமலைசாமி, கணேசமூர்த்தி, நாகராஜ் ஆகியோர் அடங்கிய 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. சுஜயின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், பாலக்காடு ரோட்டில் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது.

இதனால் அவர் கேரளாவுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

9 இடங்களில் கத்திக்குத்து

கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த சுஜய், பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி கவுரி நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இந்தநிலையில் இடையர்பாளையத்தில் வசித்த போது, அவருக்கும், சுப்புலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

சம்பவத்தன்று அந்த மாணவி பொள்ளாச்சியில் சுஜய் வசிக்கும் வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவர், அந்த மாணவியை குத்தி கொலை செய்து உள்ளார். மேலும் அவர் சத்தம் போடாமல் இருக்க முதலில் கழுத்தில் பயங்கரமாக குத்தியதாக தெரிகிறது. கழுத்து, வயிறு பகுதிகள் என 9 இடங்களில் கத்தியால் குத்தி உள்ளார்.

மனைவிக்கும் தொடர்பு?

இந்த கொலை நடந்த போது சுஜயின் மனைவி ரேஷ்மாவும் உடன் இருந்ததாக தெரிகிறது. மேலும் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டது குறித்து சுஜயின் தாய் கொடுத்த தகவலுக்கு பிறகு தான் போலீசுக்கு தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் கிடைத்து உள்ளன. இதற்கிடையில் சுஜய், தனது மனைவியுடன் தலைமறைவாகி உள்ளார்.

இதனால் ரேஷ்மாவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சுஜயை பிடித்தால் மட்டுமே கொலை செய்ததற்கான உண்மையான காரணம், இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதும் தெரியவரும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story