பணித்தள பொறுப்பாளரை தாக்கிய வார்டு உறுப்பினர் கைது
ஆரணி அருகே பணித்தள பொறுப்பாளரை தாக்கிய வார்டு உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.
ஆரணி
ஆரணி அருகே பணித்தள பொறுப்பாளரை தாக்கிய வார்டு உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.
ஆரணியை அடுத்த புதுப்பட்டு ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளராக தனசேகர் என்பவர் பணியாற்றுகிறார். இவருக்கும் வார்டு உறுப்பினரான சரத்குமாருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் கவுன்சிலர் சரத்குமார், ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ஊராட்சி தலைவர் எந்தவித பதில் அளிக்காத நிலையில் பணித்தள பொறுப்பாளர் தனசேகர் பதில் அளித்துள்ளார். நான் உன்னிடம் கேட்கவில்லை, நீ ஏன் என்னிடம் வருகிறாய் என கேட்கவே இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன்பின் அங்கிருந்து ஊருக்குள் சென்ற இருவரும் ஆபாசமாக பேசிக்கொண்டனர். அப்போது பணித்தள பொறுப்பாளரை வார்டு உறுப்பினர் சரத்குமார் தாக்கியுள்ளார்.
இது சம்பந்தமாக தனசேகர் ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வார்டு உறுப்பினர் சரத்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.