வார்டு உறுப்பினர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி


வார்டு உறுப்பினர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி
x

சாணார்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடந்தது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்

சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், திம்மணநல்லூர் ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினராக இருந்த ராமச்சந்திரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்தார். இதைத்தொடர்ந்து அந்த ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் கடந்த 9-ந்தேதி நடந்தது. அந்த வார்டில் விக்னேஷ்வரன் (வயது 25), மகேஷ்வரி (40) ஆகிய 2 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 591 வாக்குகளில் 459 வாக்குகள் பதிவாகின. பின்னர் வாக்கு பெட்டிகள் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. வாக்குபெட்டிகளில் இருந்த ஓட்டு சீட்டுகளை அதிகாரிகள் எண்ணினர். இதில் 324 வாக்குகள் பெற்று விக்னேஷ்வரன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மகேஷ்வரி 123 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 12 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விக்னேஷ்வரனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் இளையராஜா வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி செயலர் கிரி, சாணார்பட்டி ஒன்றியக்குழு தலைவர் பழனியம்மாள், துணைத்தலைவர் ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story