சி.தண்டேஸ்வரநல்லூரில் முறைகேடு:ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை கோரி வார்டு உறுப்பினர்கள் தர்ணாசிதம்பரம் அருகே பரபரப்பு
சிதம்பரம் அருகே சி.தண்டேஸ்வரநல்லூரில் முறைகேட்டில் ஈடுபடும் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்,
வார்டு உறுப்பினர்கள் தர்ணா
சிதம்பரம் அருகே உள்ள சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் மாரியப்பன். இந்த ஊராட்சியில் மொத்தம் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இந்தநிலையில் அரவிந்தன், நெப்போலியன், தீபா மாரிமுத்து, கருணாநிதி, வென்னிலா மகேஸ்வரன், அஸ்வத்துன்னிசா, சசிகலா ஆகிய 7 உறுப்பினர்கள் நேற்று மதியம் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்தபடி ஊராட்சியில் வளர்ச்சிப்பணிகள் நடைபெற வில்லை எனவும், முறைகேட்டில் ஈடுபடும் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் சிதம்பரம் வருவாய் ஆய்வாளர் நாகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வார்டு உறுப்பினர்கள் முறைகேட்டில் ஈடுபடும் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கலெக்டரிடம் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதைகேட்ட அதிகாரிகள், இதுபற்றி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
சப்-கலெக்டரிடம் மனு
இதை ஏற்ற வார்டு உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிட்டதோடு, ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் 7 பேரும் ராஜினாமா செய்ய போவதாக சப்-கலெக்டர் சுவேதா சுமன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரியிடம் மனு அளித்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிதம்பரம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.