கிருஷ்ணகிரி வழியாகரேஷன் அரிசி கடத்தினால் கடும் நடவடிக்கைகோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி எச்சரிக்கை
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி வழியாக ரேஷன் அரிசி கடத்தினால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி எச்சரிக்கை விடுத்தார்.
கண்காணிப்பு நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று கண்காணிக்க உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவிட்டார். கோவை மண்டலத்திற்குட்பட்ட, 8 மாவட்டங்களிலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் மாநில எல்லை பகுதிகளில் தீவிர சோதனை செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையிலான குழு கிருஷ்ணகிரி மாவட்டம், ஆந்திர மாநில எல்லை பகுதிகளான வரமலைக்குண்டா, குருவிநாயனப்பள்ளி சோதனைச்சாவடிகள் மற்றும் கர்நாடக எல்லை பகுதிகளான வேப்பனப்பள்ளி, நேரலகிரி, பேரிகை ஆகிய சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பணியில் இருந்த போலீசாரிடம், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
குண்டர் சட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, மகராஜகடை, காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அரவை ஆலைகளில் முறைகேடு நடைபெறுகிறதா? என, கண்காணிக்கப்பட்டது. நெல் அரவை ஆலைகளில் பயன்பாட்டில் இருக்கும் மின் அளவீட்டையும், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிக கழகத்தால் வழங்கப்படும் நெல் அரவையின் அளவீட்டையும் ஒப்பிட்டு சரி பார்க்கப்பட்டது.
மாநில எல்லைகளை ஒட்டியுள்ள சோதனைச்சாவடி மற்றும் அப்பகுதி கிராமங்களிலும் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் சிக்குபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிருஷ்ணகிரி வழியாக அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது சேலம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ரவிவர்மன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, திபாகர், மணிகண்டன், போலீசார் மற்றும் பறக்கும் படை தனி தாசில்தார் இளங்கோ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.