சீறி பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்
சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறி பாய்ந்த காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டினர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறி பாய்ந்த காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டினர். முன்னதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டு போட்டி
சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பஞ்சாயத்து பகுதியில் 56-வது ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தென் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து 238 காளைகள் கலந்து கொண்டன. இந்த காளைகளை அடக்க 327 வீரர்கள் களத்தில் நின்றனர். ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் காலை 6 மணிக்கே பார்வையாளர்களும், மாடுகளை அடக்க வந்த வீரர்களும், காளைகளும் குவிந்தனர். பரிசோதனைக்கு பின்னரே காளைகளும், வீரர்களும் களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
உறுதி மொழி
போட்டியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், மேயர் சங்கீதா இன்பம், சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், தாசில்தார் லோகநாதன், சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ், பள்ளப்பட்டி பஞ்சாயத்து தலைவர் உசிலை செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமராஜ், தி.மு.க. நிர்வாகிகள் உதயசூரியன், காளிராஜன், இன்பம், மஞ்சுநாத், ஒன்றிய கவுன்சிலர்கள் கணேசன், கலைமணி, மைக்கேல், ராஜேஷ், வருவாய் ஆய்வாளர்கள் விக்னேஷ்வரன், சேரலாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போட்டி தொடங்குவற்கு முன்னர் மாடுபிடி வீரர்கள் மைதானத்தில் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் கோவில் மாடு முதலில் களம் இறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் களத்தில் விடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு விழாக்குழு சார்பில் வீரவாள் வழங்கப்பட்டது.
4 பேர் காயம்
சீறிபாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் மல்லுக்கட்டி அடக்க முயன்றனர். ஆனால் பல மாடுகள் வீரர்களிடம் பிடிபடாமல் சென்றது. ஒரு சில மாடுகள் பிடிப்பட்டன.. மாடுகளை அடக்க முயன்ற போது மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக்(வயது 21) என்பவர் உள்பட 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மதியம் 2.30 மணி வரை நடைபெற்றது. போலீசார் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே போட்டிக்கு அனுமதி அளித்து இருந்த நிலையில் போட்டி கால தாமதமாக தொடங்கப்பட்டதால் மதியம் 2.30 மணி வரை நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டியை காண 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் பள்ளப்பட்டி பகுதியில் திரண்டனர். 400-க்கும் மேற்பட்ட போலீசார் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.