ஈரோட்டில் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு 'சீல்'


ஈரோட்டில் செயல்பட்டு வந்த  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு சீல்
x
தினத்தந்தி 2 Oct 2022 1:00 AM IST (Updated: 2 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

அலுவலகத்துக்கு ‘சீல்’

ஈரோடு

ஈரோட்டில் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்துக்கு நேற்று 'சீல்' வைக்கப்பட்டது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

டெல்லியை தலைமை இடமாக கொண்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்பட்டு வந்தது. இந்த அமைப்பு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமையும், அமலாக்கத்துறையும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் செயல்பாடுகளை கண்காணித்து வந்தனர்.

அப்போது அந்த அமைப்புக்கு வெளி நாடுகளில் இருந்து ஹவாலா பணம் பல கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 22-ந்தேதி மற்றும் 27-ந்தேதி பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர்.

செயல்பட தடை

இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதோடு பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் செயல்பட மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளின் அலுவலகங்களை மூட மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.

அலுவலகத்துக்கு 'சீல்'

அதன்படி ஈரோடு ஜின்னா வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் 2-வது மாடியில் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் ஈரோடு மாவட்ட அலுவலகத்துக்கு நேற்று ஈரோடு ஆர்.டி.ஓ. ம.சதீஷ்குமார் தலைமையில் தாசில்தார் பாலசுப்பிரமணியம், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், நில வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் 'சீல்' வைத்தனர்.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் ஈரோட்டில் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திற்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

1 More update

Next Story