கடலூர் அருகே மின்மாற்றியில் பிணமாக தொங்கிய தொழிலாளி கொலையா? போலீசார் விசாரணை

கடலூர் அருகே மின்மாற்றியில் தொழிலாளி பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரெட்டிச்சாவடி,
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே வில்லுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் காண்டீபன் (வயது 37). கூலி தொழிலாளியான இவர் நேற்று அதே பகுதியில் உள்ள விளைநிலத்தில் இருந்த மின்மாற்றியில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற விவசாய தொழிலாளர்கள் இதுபற்றி ரெட்டிச்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மர்மமான முறையில் மின்மாற்றியில் தலைகீழாக பிணமாக தொங்கிய காண்டீபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர்.
கொலையா?
விசாரணையில், காண்டீபனின் தங்கை தேவிகா கடந்த ஆண்டு திடீரென இறந்து விட்டார். இதனால் காண்டீபன் மனஉளைச்சலில் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, காண்டீபன் தங்கை இறந்த மனஉளைச்சலில் மின்மாற்றியில் ஏறி உயரழுத்த மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து மின்மாற்றியில் தொங்க விட்டுச் சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






