அமைச்சர் பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டதா? அண்ணாமலை பரபரப்பு பேட்டி


அமைச்சர் பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டதா? அண்ணாமலை பரபரப்பு பேட்டி
x

அமைச்சர் பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டதா? என்பது குறித்து அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை,

ராகுல் காந்தி நடைப்பயணத்தில் எந்த எழுச்சியும் மக்கள் பார்க்க வில்லை. தி.மு.க. அமைச்சர் ஒருவர் கல்லெடுத்து வீசுகிறார். 2 நாட்கள் கழித்து மேடையில் தொண்டரை ஒரு அமைச்சர் அடிக்கிறார். நேற்று பா.ஜ.க. 2 வீடியோ வெளியிட்டது. அந்த வீடியோ எடிட் செய்யாதது. அதில் கோவிலை இடிப்பதை பெருமையாக டி.ஆர்.பாலு எம்.பி. பேசுகிறார்.

அந்த வீடியோவை அமைச்சர் ஏ.வ.வேலு எடிட் செய்ததாக சொல்கிறார். அவருக்கு நான் சவால் விடுகிறேன். அந்த வீடியோவை ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளலாம்.

தேர்தல் ஆணையத்தில் புகார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வது குறித்தும், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் குறித்தும் கொச்சையாக அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார். பா.ஜ.க. சார்பில் மூத்த நிர்வாகிகள் எடிட் செய்யப்படாத வீடியோவுடன் நாளை (இன்று) தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளனர். அதை எடிட் என நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயார்.

அந்த வீடியோ உண்மை என்றால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். கோவிலுக்கு செல்வது தொடர்பாக சேலத்தில் பட்டியல் இன சகோதரரை தி.மு.க. பிரமுகர் ஆபாசமாக திட்டியுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் மக்கள் பார்த்து கொண்டுள்ளனர்.

கட்சியின் நிலைப்பாடு

சமூக நீதி குறித்து பேச தி.மு.க. கட்சியினருக்கு என்ன அருகதை இருக்கிறது? புதுக்கோட்டையில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் தொடர்பாக இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஈரோடு இடைத்தேர்தலில் நாளை (இன்று) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. எனவே 2 நாட்களில் கட்சியின் நிலைபாடு தெரி விக்கப்படும். ஏற்கனவே பணபட்டுவாடா தொடங்கப்பட்டு உள்ளது. பா.ஜ.க.வை பொறுத்தவரை இந்த தேர்தலில் பலத்தை காட்டுவதை விட ஒரு வலுவான வேட்பாளர் நிற்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். பா.ஜ.க.விற்கான தேர்தல் இது இல்லை. 2024 நாடாளுமன்ற தேர்தல் தான் எங்களின் இலக்கு.

அரசியல் செய்ய முடியாது

பெங்களூருவில் இருந்து வெளியே போங்கள் என்று சொன்னால் நம்ம மக்கள் எங்கு போவார்கள். இன்னும் 10 வருடத்தில் தமிழ்நாட்டில் வேலைக்கு ஆள் கிடைக்காது.

ராஜ்பவனில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், கவர்னர் ஆர்.என்.ரவியும் ஒன்றாக கம்பீரமாக நடந்து வந்தார்கள். முதல்- அமைச்சரும், கவர்னரும் சுமுகமாக இருக்கிறார்கள். விமர்சனம் செய்பவர்களை பார்த்துக் கொண்டிருந்தால் அரசியல் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story