புத்தூர் பாசன வாய்க்காலில் கொட்டப்படும் கழிவுகள்


புத்தூர் பாசன வாய்க்காலில் கொட்டப்படும் கழிவுகள்
x
தினத்தந்தி 27 Aug 2023 12:15 AM IST (Updated: 27 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புத்தூர் பாசன வாய்க்காலில் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற மற்றும் மேலும் கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

புத்தூர் பாசன வாய்க்காலில் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற மற்றும் மேலும் கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாசன வாய்க்கால்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து திருமயிலாடி, கூத்தியம்பேட்டை, கொப்பியம், மாதானம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் இந்த பகுதிகளுக்கான பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாகவும் இருந்து வருகிறது. இந்தநிலையில் இந்த வாய்க்காலில் தற்போது பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள் கொட்டப்பட்டு குப்பைக்கூடமாக காட்சியளிக்கிறது.

மேலும் இந்த வாய்க்காலில் புத்தூர் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் விடப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் கழிவுநீர் பிளாஸ்டிக் குப்பைகளில் தேங்கிய அப்படியே கிடந்து வருகிறது. இதனால் கழிவு நீரிலிருந்து துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்களும் அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாகும் பகுதியாகவும் இந்த பகுதி மாறி வருகிறது.

கோரிக்கை

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த வாய்க்கால் பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்து வருகிறது. தற்போது வாய்க்கால் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவு காணப்படுகிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படுவதற்காக பழைய இரும்பு கடைகளில் எடை வைத்து வாங்கப்படுகிறது.

அப்படி இருக்கும் நிலையில் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பாசன மற்றும் வடிகால் வாய்க்காலில் கொட்டி வருவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் வாய்க்காலின் நடு பகுதியில் அப்படியே புதைந்து கிடக்கிறது. புத்தூர் கிளை வாய்க்காலில் சாக்கடை நீருடன் கலந்து கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றியும், கழிவுநீர் வெளியேற்றுவதை தடுத்தும் சுற்றுப்புற சுகாதாரத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.


Next Story