குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்


குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்
x

தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஆறுகளில் கொட்டுகின்றனர்

மனிதன் பயன்படுத்திய கழிவுகளான குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என 2 வகைப்படும். பழங்காலத்தில் குப்பை குழிகள் இருந்தன. அதில் வீட்டு குப்பைகளை கொட்டி மக்கச் செய்வார்கள். மக்கிய குப்பைகள் உரமாக வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும். இன்றைக்கு குப்பை குழிகள் எந்த வீடுகளிலும் இல்லை. குப்பை கிடங்கு தான் நம் பயன்பாட்டில் இருக்கின்றன. அதில் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் பொருட்களே அதிகம்.குப்பைகள் இன்றைக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. குப்பைகளை எங்கு கொட்டுவது என்று தெரியாமல் தெரு ஓரங்களில், ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் என அனைத்து நீர்நிலைகளிலும் கொட்டப்படுகின்றன. இதனால் நம் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதோடு மற்ற உயிர்களுக்கும் இன்னல்களை விளைவிக்கிறது.

தொற்று நோய் பரவும் அபயாம்

தஞ்சை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் வீடு தோறும் நேரில் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து ஒரு சில பகுதிகளில் வாங்கி வருகின்றனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதி பாண்டியன் நகர், சுந்தரம் நகர் போன்ற இடங்களில் குப்பை தொட்டிகள் நிரம்பி கவிழ்ந்து கிடக்கிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் சாலையோரம் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.அந்த தொட்டி குப்பைகளால் நிரம்பினாலும் பல இடங்களில் குப்பைகளை அள்ளி செல்வது இல்லை. பல இடங்களில் குப்பை தொட்டிகள் உடைந்து இருப்பதால் குப்பைகள் சாலையோரம் தான் கொட்டப்படுகிறது.இந்த குப்பைகளில் சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்கிறதா? என மாடுகள், ஆடுகள் கிளறுவதால் குப்பைகள் சாலையின் மையப்பகுதி வரை சிதறி கிடக்கிறது.இந்த குப்பைகளை அள்ளாததால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அள்ளுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

அபராதம் விதிக்க வேண்டும்

இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறும்போது, சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அள்ளி செல்வது கிடையாது. இது குறித்து யாரிடம் புகார் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. குப்பைகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது.மேலும் கொசுக்கள் பொதுமக்களை கடித்தால் அவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சை நகரில் உடைந்த குப்பை தொட்டிகளை மாற்றிவிட்டு புதிய தொட்டிகளை வைக்க வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். தொட்டியில் குப்பைகளை கொட்டாமல் சாலையோரம் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனர்.


Next Story