பீறிட்டு வெளியேறி வீணாகும் தண்ணீர்
பீறிட்டு வெளியேறி தண்ணீர் வீணாகியது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் அறங்கோட்டை, ஸ்ரீபுரந்தான், மதனத்தூர், கோடாலிகருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், ஆண்டிமடம், பெரம்பலூர் ஆகிய பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோடாலிகருப்பூரில் இருந்து உடையார்பாளையம் செல்லும் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பூவாயிமண்டபம் ஏழு கண் மதகு பகுதியில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு அளவுக்கு அதிகமாக தண்ணீர் வெளியேறி வருகிறது. அதேபோல் அந்த இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் தரைக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் குபுகுபுவென வெளியேறுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக சிந்தாமணி காட்டாற்று ஓடையின் மேல் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் ஒன்றில் சிறிய அளவில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு வெளியேறுகிறது. கடந்த 2 நாட்களில் அது படிப்படியாக அதிகரித்து நேற்று காலை முதல் அதிக அளவில் தண்ணீர் பீறிட்டு வெளியேற தொடங்கியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த குழாய் வழியாக தொடர்ந்து தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. நேரம் செல்லச்செல்ல அந்த குழாயில் தண்ணீர் வெளியேறிய பகுதியில் உடைப்பு பெரிதாகி இரவு 8 மணிக்கு மேல் ஊற்று போல் தண்ணீர் வெளியேறி தா.பழூர் - ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் வெளியேற தொடங்கியது. இதனால் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். நேற்று காலை முதல் தொடர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த மக்கள், நேற்று இரவு சாலையில் பீறிட்டு வெளியேறி தண்ணீரை பார்த்ததும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அந்த குழாய் மூலம் தண்ணீர் வினியோகிப்பதை நிறுத்த வலியுறுத்தினர். அதன் பிறகு சுமார் 1 மணி நேரம் கழித்து அந்த குழாய் மூலம் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதேபோல் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் தொடர்ந்து சரியான பராமரிப்பு இல்லாததால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுவது தடுக்கப்பட வேண்டும் என்றும், தொடர்புடைய அதிகாரிகள் பராமரிப்பு பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்று கண்காணிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.