4-வது குடிநீர் திட்டம் சோதனை ஓட்டம்
திருப்பூர் மாநகராட்சியில் 4-வது குடிநீர் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு வருகிற ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சியில் 4-வது குடிநீர் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு வருகிற ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.
4-வது குடிநீர் திட்டம்
திருப்பூர் மாநகராட்சி மேயராக தினேஷ்குமார் பொறுப்பேற்று இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) 100 நாட்கள் நிறைவு பெறுகிறது. கடந்த 100 நாட்களில் பொதுமக்களிடம் இருந்து 427 கோரிக்கை மனுக்கள் பெற்று 303 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 124 மனுக்கள் நிலுவையில் உள்ளன. ரூ.30 கோடியே 31 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் 169 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ரூ.54 கோடியே 56 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் 120 பணிகள் நடைபெற்று வருகிறது. 1,486 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அடுத்து வரும் 100 நாட்களில் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-
திருப்பூர் மாநகரில் 164 இடங்கள் தாழ்வான பகுதிகளில் கண்டறியப்பட்டு 121 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ.245 கோடியே 29 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அல்லது மற்ற திட்டங்களின் கீழ் பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வேண்டி நகராட்சி நிர்வாக ஆணையாளரின் ஒப்புதல் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க நொய்யல் ஆற்றின் இருபுறமும் 13 கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளன. 4-வது குடிநீர் திட்டப்பணிகள் குடிநீர் குழாய்கள் பதிப்பது துரிதப்படுத்தப்பட்டு வருகிற ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் குழாய் பதிக்கும் பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
4 புதிய பாலங்கள்
அனைத்து துறைகளையும் இணைத்து 300-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் ஐ.சி.சி.சி.மையம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டுக்காக புதிதாக 4 பாலங்கள் அமைக்க ரூ.32 கோடியே 62 லட்சத்தில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பாலங்கள் கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
60 வார்டுகளில் சேதமடைந்த 157 கிலோ மீட்டர் தூரம் தார் சாலைகளை செப்பனிட மதிப்பீடுகள் தயார் செய்யப்படுகிறது. மாநகரில் 10 பூங்காக்கள் மேம்படுத்தப்படும். புதிதாக 6 ஆயிரம் மின்விளக்குகள் பொறுத்தப்பட உள்ளன. ஆண்டிப்பாளையம் குளம் சுற்றுலாதளமாக மாற்ற பணிகள் நடக்கிறது. மாநகரில் நீச்சல் குளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மக்களுடன் மேயர் திட்டம்
திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு பயன்படுத்த புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. மக்களுடன் மேயர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து அக்குறைகளை உடனடியாக தீர்வு காணப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.