ரூ.10-க்கு தண்ணீர் வாங்கி குடிக்கும் சேரந்தை கிராம மக்கள்
உப்புநீரை குடிநீராக்கும் திட்டம் முடங்கியதால் கடலாடி தாலுகா சேரந்தை உள்ளிட்ட பகுதி கிராமத்தினர் ரூ.10 கொடுத்து குடிநீர் வாங்கி குடித்து வருகின்றனர்.
உப்புநீரை குடிநீராக்கும் திட்டம் முடங்கியதால் கடலாடி தாலுகா சேரந்தை உள்ளிட்ட பகுதி கிராமத்தினர் ரூ.10 கொடுத்து குடிநீர் வாங்கி குடித்து வருகின்றனர்.
கடும் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா கொத்தங்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது சேரந்தை கிராமம். நிலத்தடி நீர் கடும் உப்பாக உள்ள இந்த பகுதியில் குடிநீருக்காக மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதன்காரணமாக இந்த பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் உப்பு நீரை குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப் பட்டது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல் படுத்தப்பட்டு உள்ள இந்த குடிநீர் திட்டத்தின் மூலம் சேரந்தை, சேனாங்குறிச்சி, தனிச்சியம், டி.கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் பேர் பயனடைந்து வந்தனர்.
குடிநீர் வினியோகம்
ஒருநாள் விட்டு ஒருநாள் 2 கிராமங்கள் வீதம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்த கிராமத்தினரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்த இந்த திட்டம் பல ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது செயல்படாமல் முடங்கி போய் உள்ளது.
இதன்காரணமாக இந்த குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த 8 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மனு
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அ.ம.மு.க. விவசாய அணி ஒன்றிய செயலாளர் கோவிந்தன் முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த மேற்கண்ட குடிநீர் திட்டம் கடந்த பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது.
இதன்காரணமாக குடிநீர் சப்ளை செய்யப்படாத நிலையில் நரிப்பையூரில் இருந்து வரும் வண்டியில் தண்ணீரை ஒரு குடம் ரூ.10 கொடுத்தும், மேலச்செல்வனூர் பகுதியில் இருந்து வரும் வண்டியில் அன்றாட பயன்பாட்டிற்கு ரூ.5 கொடுத்தும் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இந்த குடிநீர் திட்டத்தினை பழுதுநீக்கி செயல்பாட்டிற்கு கொண்டுவரக் கோரி மனு அளித்தும் எந்த பயனும் இல்லை.
குடிநீர் திட்டம்
எங்கள் பகுதி மக்களின் அவதியை போக்கும் வகையில் குடிநீர் திட்டத்தினை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அல்லது மாற்று திட்டம் நிறைவேற்றி தண்ணீர் தாகத்தை தீர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.