திருமங்கலம் கால்வாயில் தண்ணீர் திறப்பு
விக்கிரமங்கலத்தில் திருமங்கலம் பிரதான நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 36 கண்மாய் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
சோழவந்தான்,
விக்கிரமங்கலத்தில் திருமங்கலம் பிரதான நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 36 கண்மாய் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
தண்ணீர் திறப்பு
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் வைகை திருமங்கலம் பிரதான நீட்டிப்பு கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மூலம் 36 கண்மாய்க்கு தண்ணீர் பாசனத்திற்கு நிரப்பப்படும். இந்த கண்மாய்கள் மூலம் சுமார் 300 ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடைபெறும்.
வைகை பேரணையில் இருந்து கடந்த 7-ந் தேதி திருமங்கலம் பிரதான கால்வாய் திருமங்கலம் பாசன நீட்டிப்பு கால்வாய்க்கு பாசனத்திற்கு 222 கனஅடி தண்ணீர் திறக்கப் பட்டது. இதற்கான தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
திருமங்கலம் பிரதான நீட்டிப்பு கால்வாய் பெரியாறு வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் பாசன கோட்டத் தலைவர் எம்.பி. முருகன் தலைமையில் முதலைக்குளம் ஊராட்சி தலைவர் பூங்கொடி பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட ஊராட்சி துணைதலைவர் முத்துராமன் ஆகியோர் முன்னிலையில் பூஜைகள் நடைபெற்றன.
நீட்டிப்பு
கிழக்குப்பகுதி தொட்டில் பாலத்தின் மூலம் 23 கிலோ மீட்டர் தண்ணீர் செல்லும் நீட்டிப்பு கால்வாய் மூலம் முதலைக்குளம் பெரியகண்மாய், கோவிலான் குளம், கருக பிள்ளை, கருமாத்தூர், செட்டிகுளம் பன்னியான்,கண்ணனூர், கொக்குளம், புள்ளனேரி, புளியங்குளம் சொரிக்கான்பட்டி, கின்னி மங்கலம், கரடிக்கல் முறப்பனூர், கீழ உரப்பனூர், கழுவன்குளம் உள்பட 36 கண்மாயிக்கு தண்ணீர் சென்றுசேரும்.
மலர் தூவி வரவேற்பு
பாசன கோட்டத் தலைவர் முருகன் தலைமையில் முதலைக் குளம் ஊராட்சி தலைவர் பூங்கொடி பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் அரவிந்தன் ஆகியோர் முன்னிலையில் பொதுப் பணி துறையினர் மதகுகளை திறந்து விட்டனர். தண்ணீரை விவசாயிகள் வரவேற்று மலர் தூவினர்.
இதில் கொக்குளம் ஊராட்சி தலைவர் நர்மதா, காசிமாயன், ஒன்றிய கவுன்சிலர் சிவபாண்டி, மாவட்ட ஊராட்சி துணை சேர்மன் முத்துராமன், கருமாத்தூர் இளங்கோ, பன்னியான் காசி, புளியங்குளம் தர்மர், கண்ணனூர் தமிழரசன், புறப் பனூர் சாமிநாதன் உட்பட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.