குடிநீர் ஆதாரம் இல்லாத பகுதிகளில் தண்ணீர் வினியோகம் இல்லை
ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய் இணைப்பு வழங்கப்பட்டும் குடிநீர் ஆதாரம் இல்லாத பகுதிகளில் தண்ணீர் வினியோகம் இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளில் குடிநீர் ஒவ்வொருவரும் உயிர் வாழ ஜீவநாடியாக உள்ளது
உயிர் நீர் இயக்கம்
மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு குடிநீர் வழங்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கடந்த 2019-ல் பிரதமர் நரேந்திரமோடி, கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை குழாய்கள் மூலம் வழங்குவதற்கு வகை செய்யும் ஜல் ஜீவன் மிஷன் என்ற உயிர் நீர் இயக்கம் என்னும் திட்டத்தை அறிவித்தார்.
2024-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் இலக்கு. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 55 லிட்டர் குடிநீராவது வழங்கப்பட வேண்டும் என்பது குறிக்கோளாக உள்ளது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்று உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்ட பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் 45 சதவீதம் மத்திய அரசும், 45 சதவீதம் மாநில அரசும் மீதமுள்ள 10 சதவீதம் பொது மக்களின் பங்களிப்பு தொகையாகவும் பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கிராமமாக இருந்தால் மத்திய அரசு 47.5 சதவீதம், மாநில அரசு 47.5 சதவீதம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு தொகை 5 சதவீதம் ஆகும்.
இந்த மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்ட நிதியில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் 51 கிராம ஊராட்சிகளில் ஒவ்வொருவருக்கும் 55 லிட்டர் வழங்கக்கூடிய அளவுக்கு நீர் ஆதாரம் உள்ள 155 குக்கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
குக்கிராமங்கள்
கூடுதலாக 14-வது, 15-வது நிதிக்குழு மானியம், கணக்கு எண்-2, மாவட்ட ஊராட்சி நிதி மற்றும் எம்.ஜி.என்.ஆர். இ.ஜி.எஸ். ஆகிய பிறதிட்டங்களை ஒருங்கிணைத்து அந்த நிதியில் இருந்து 10 ஊராட்சி ஒன்றியங்களில் 115 கிராம ஊராட்சிகளில் 263 குக்கிராமங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வீடு தோறும் குடிநீர் வழங்கும் பொருட்டு இந்த மாவட்டத்தில் குழாய் இணைப்புடன் கூடிய குடிநீர் இணைப்புகள் 73 ஆயிரத்து 688 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதற்காக ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் ரூ.31.03 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் இதுவரை ரூ.25.27 கோடி செலவிடப்பட்டு உள்ளது. மேலும் பிறதிட்டங்களை ஒருங்கிணைத்து ரூ.18.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் இதுவரை ரூ.18.28 கோடி நிதி செலவிடப்பட்டு உள்ளது. மொத்தம் இந்த பணிக்காக ரூ.43.55 கோடி செலவிடப்பட்டு உள்ளது.
குடிநீர் இணைப்பு
மீதம் உள்ள கிராமங்களில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 2024-ம் ஆண்டிற்குள் மீதமுள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்புடன் கூடிய குடிநீர் இணைப்பு வழங்க பணிகள் நடைபெற்று வருகிறது என்று மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.
தினைக்குளம் ஊராட்சி துணைத்தலைவர் ஸ்ரீதமிழ்: பொதுமக்கள் ஒத்துழைப்புடன் முழுமையாக நிறை வேற்றப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திருப்புல்லாணி யூனியன் தினைக்குளம் ஊராட்சியில் ஏற்கனவே 400 குடிநீர் இணைப்புகள் இருந்த நிலையில் தற்போது 840 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
சீராக தண்ணீர்
இந்த திட்டத்திற்காக ஊராட்சிக்கு உட்பட்ட நாடார் குடியிருப்பு கடற்கரையில் 5 குடிநீர் கிணறுகள் அமைத்து அங்கிருந்து பைப்லைன் அமைத்து தினைக்குளம் தரைமட்ட தொட்டியில் சேமித்து அங்கிருந்து மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் ஏற்றி பகுதி வாரியாக வாரம் ஒருமுறை வீடுகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. நவீன பைப்லைன் மூலம் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள பிரத்யேக ப்ளோ வால்வ் காரணமாக ஆரம்பம் முதல் கடைசி வீடு வரை ஒரே சீராக தண்ணீர் வரும். மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுக்க முயன்றால் இந்த ப்ளோ வால்வ் தானாகவே மூடிக்கொள்ளும். இதனால் அனைவருக்கும் சமமாக தண்ணீர் கிடைக்கும் என்றார்.
சுத்தமான குடிநீர்
இந்த திட்டத்தின்கீழ் குடிநீர் இணைப்பு பெற்ற வேதக்காரன் வலசை கிராமத்தை சேர்ந்த தேவி: முன்பு வெகுதூரம் நடந்து சென்று ஊருணி மற்றும் பொது கிணற்றில் குடிநீர் எடுத்து வருவோம். வண்டிகளில் குடங்களை வைத்து கொண்டு வருவோம். தற்போது ரூ.2 ஆயிரம் இணைப்பு கட்டணம் செலுத்தி வீட்டிலேயே குடிநீர் இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகிறோம். வாரம் ஒருமுறை 3 மணி நேரம் தண்ணீர் வருகிறது. பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீராக உள்ளது.
மொத்திவலசை கிராமத்தை சேர்ந்த செல்வராணி: குடிநீருக்காக கோடை மற்றும் வறட்சி காலங்களில் அலைந்து திரிந்த நிலை மாறி எங்களது குடிசை வீடுகளுக்கே குழாய் இணைப்பு மூலம் தண்ணீர் வருவது வரவேற்கத்தக்கது. எங்களது கிராம பகுதியில் குடிநீர் பிரச்சினையே இல்லை.
மகிழ்ச்சி
முதுகுளத்தூர் தாலுகா குமாரகுறிச்சி ஊராட்சிக்குட்பட்ட ராமலிங்கபுரம் சாந்தி: மத்திய அரசின் குடிநீர் வினியோகத் திட்டத்தின் கீழ் எங்களுக்கு கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிதண்ணீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. தினமும் குடிதண்ணீர் வருவதால் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் தற்போது தான் மகிழ்ச்சியாக உள்ளோம். பல வருடங்களாகவே தள்ளு வண்டிகளில் குடங்களுடன் பல கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று தண்ணீர் சேகரித்து வந்தோம். தற்போது வீடுகளுக்கே நேரடியாக குடிதண்ணீர் இணைப்பு கொடுத்து தண்ணீரும் சரியாக வருவதால் மிகுந்த ஒரு மகிழ்ச்சியாக உள்ளது.இதற்கு நடவடிக்கை எடுத்த மத்திய-மாநில அரசுக்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆனாலும் மாவட்டத்தில் பல கிராம பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் இணைப்பு வழங்கப்பட்டும் குடிநீர் ஆதாரம் இல்லாததால் தண்ணீர் சப்ளை செய்யப்படாமல் உள்ளது. சில பகுதிகளில் குறைந்த அளவு ஆதாரங்களை வைத்து மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்யும் நிலை உள்ளது. பல கிராமங்களில் இந்த திட்ட பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.