ராமநாதபுரம் பெரிய கண்மாய் நிரம்பியது
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாகவும் வைகை அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் காரணமாகவும் ராமநாதபுரம் பெரிய கண்மாய் நிரம்பியது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாகவும் வைகை அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் காரணமாகவும் ராமநாதபுரம் பெரிய கண்மாய் நிரம்பியது.
தொடர்மழை
தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டி வருகிறது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இந்த தண்ணீர் வைகை ஆற்று பகுதியில் சீறிப்பாய்ந்து ராமநாதபுரம் மாவட்டதை நோக்கி மீண்டும் வந்து கொண்டு உள்ளது.
இடையில் தண்ணீர் வரத்து நின்றிருந்த வேளையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைநீரோடு வைகை அணை உபரிநீரும் சேர்ந்து ராமநாதபுரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளது. இந்த தண்ணீரை பெரிய கண்மாய்க்கு வரும் வழியில் உள்ள இதர கண்மாய்களுக்கு எடுத்து அனுப்பி வருகின்றனர்.
உபரி நீர்
இதனால் கடந்த மாதம் உபரிநீரால் ஓரளவு நிரம்பிய நீர்நிலைகளில் கூடுதல் தண்ணீர் சேர்ந்த வண்ணம் உள்ளது. தற்போதைய நிலையில் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 6¼ அடி தண்ணீர் உள்ளதால் கண்மாயின் பாதுகாப்பு கருதி சக்கரக்கோட்டை கண்மாய்க்கு குறைந்தளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
சக்கரக்கோட்டை கண்மாயும் அதன் கொள்ளளவை எட்டி உள்ளதால் அருகில் உள்ள குடியிருப்புகளை பாதிக்காத வகையில் தண்ணீர் சிறிதளவே திறந்துவிடப்பட்டு உள்ளது. மீதம் உள்ள தண்ணீர் காவனூர் பெரிய கண்மாய் கலுங்கு வழியாக கடலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் உபரிநீர் வேறு வழியின்றி கடலுக்கு திறந்துவிடப்பட்டு வருகிறது. பெரிய அளவில் இந்த தண்ணீரின் அளவு இல்லாத போதிலும் இதுநாள்வரை கடலில் கலந்து வீணாகிய தண்ணீர் அளவு என்று பார்த்தால் வேதனை அளிப்பதாக உள்ளது.
அந்த அளவிற்கு தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலையில் தண்ணீரால் மக்களுக்கும் மண்ணுக்கும் பயன் இல்லாமல் போய் வருகிறது. இதுகுறித்து பொதுப் பணித்துறையினர் கூறியதாவது:- வைகை அணையில் இருந்து பெரிய அளவில் திறந்துவிடப்படாவிட்டாலும் தொடர் மழை காரணமாக தண்ணீர் சீராக வந்து கொண்டிருக்கிறது.
வரும் வழியில் உள்ள நீர்நிலைகளை முடிந்த அளவு நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த தண்ணீரை கொண்டு வைகை பாசனப்பரப்பில் பயன்பெறும் கண்மாய்களில் 100-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் பிரித்து வழங்கப்பட்டு உள்ளது. இதில் 18 கண்மாய்கள் 75 முதல் 100 சதவீதமும், 40 கண்மாய்கள் 50 முதல் 75 சதவீதமும், 35 கண்மாய்கள் 25 முதல் 50 சதவீதமும், 25 கண்மாய்கள் 25 சதவீதமும் தண்ணீரால் நிரம்பி உள்ளது.
களரி கண்மாய்
களரி கண்மாயை பொறுத்த வரை பார்த்திபனூர் மதகு பகுதியில் இருந்து 36 கிலோ மீட்டர் தூரம் கடந்து மஞ்சக்கொல்லை பகுதிக்கு வந்து அங்கிருந்து களரி கால்வாயில் 25 கிலோ மீட்டர் தூரம் சென்றால்தான் களரிகண்மாய்க்கு தண்ணீர் சென்றடையும். இவ்வளவு தூரம் தண்ணீரை கொண்டு செல்வதற்கு வழியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் எடுத்ததுபோக சிறிதளவு தண்ணீர்தான் செல்ல முடியும். இதன்காரணமாக இந்த முறை எப்படியாவது களரி கண்மாயை நிரப்ப திட்டமிட்டுள்ளோம். களரி கால்வாயில் இதற்காக தண்ணீர் செல்லும் வகையில் தற்போதைக்கு புதியகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.