நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ஒரே நாள் இரவில் 106 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அருகே உள்ள மங்களம், ஆனந்தூர், பாரனூர் சிங்கனேந்தல், சோழந்தூர், நாரல் உள்ளிட்ட பல கிராமங்களிலும் கன மழைபெய்துள்ளது. இதில் பல ஏக்கரில் வளர்ந்து நிற்கும் நெற் பயிர்களை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் பெண் விவசாயி இருதயமேரி கூறியதாவது: பருவமழை சீசன் தொடங்கியதில் இருந்து ஓரளவு மழை பெய்து வந்தது. பயிர்கள் வளர்வதற்கு உகந்த மழையாக இருந்தது. ஆனால் இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த கன மழையால் ஆர்.எஸ். மங்கலத்தை சுற்றி பல கிராமங்களில் நெற் பயிர்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கி கிடக்கின்றன. இந்த மழை நீரை வெளியேற்ற முடியாமல் தவித்து வருகிறோம். வேளாண்மை துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் அப்போதுதான் உண்மை நிலவரம் தெரியும். இவ்வாறு அவர் கூறினார். ஆர்.எஸ் மங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் பல்வேறு தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.