வைகை தண்ணீர் வரத்தால் நிரம்பிய உத்தரகோசமங்கை கண்மாய்
பருவமழை பெய்யாத நிலையில் திருஉத்தரகோசமங்கை கண்மாய் வைகை தண்ணீர் வரத்தால் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருஉத்தரகோசமங்கை,
பருவமழை பெய்யாத நிலையில் திருஉத்தரகோசமங்கை கண்மாய் வைகை தண்ணீர் வரத்தால் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எதிர்பார்ப்பு
ராமநாதபுரம் மாவட்டம் வறண்ட மாவட்டம் என்று கூறப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த மாவட்டத்தை பொறுத்தவரை விவசாயிகள் பருவமழை சீசனை எதிர்பார்த்து நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் ராமநாதபுரம், திருஉத்தரகோசமங்கை, ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பல ஊர்களில் 300-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் அமைந்துள்ளன. பருவமழை சீசனின்போது இந்த கண்மாய்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் தான் விவசாயிகளுக்கு கை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திர கோசமங்கை கிராமத்தில் உள்ள உத்தரகோசமங்கை கண்மாய் இந்த ஆண்டு வைகை தண்ணீர் வரத்தால் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
இந்த ஆண்டு பருவமழை சீசன் தொடங்கியுள்ள நிலையிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை என்பது மிக மிக குறைவாகவே உள்ள நிலையில் மாவட்டத்தில் பெரும்பாலான கண்மாய் மற்றும் ஊருணிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டு வரும் நிலையில் வைகை தண்ணீர் வரத்து காரணமாக திருஉத்தரகோசமங்கை கண்மாயில் ஓரளவு தண்ணீர் உள்ளதால் இந்த ஆண்டு நெல் விவசாயத்தை காப்பாற்ற முடியும் என்று விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தை சேர்ந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திரு உத்தரகோசமங்கை கண்மாயில் ஊராட்சி சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக கண்மாய் கரையை சுற்றி படித்துறை கட்ட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.