வைகை தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை
நன்கு வளர்ந்துள்ள பயிர்களை மழை இல்லாத நிலையில் காப்பாற்ற வைகை தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஆர்.எஸ்.மங்கலம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
நன்கு வளர்ந்துள்ள பயிர்களை மழை இல்லாத நிலையில் காப்பாற்ற வைகை தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஆர்.எஸ்.மங்கலம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பருவமழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்தபோதிலும் கண்மாய் பாசன பகுதிகளில் நீர் உள்ளதால் பயிர்கள் நன்றாக வளர்ந்துள்ளன. மழையில்லாத நிலையில் இந்த நீரினை பயன்படுத்தி பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்தநிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டார பகுதிகளில் பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராகும் நிலையை நோக்கி உள்ளன. கண்மாயில் தண்ணீரின் அளவு குறைந்து வருவதால் பயிர்களுக்கு போதிய அளவில் தண்ணீர் இருக்குமா என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
பாசன பரப்பளவு
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கண்மாய்களின் நீரினை பயன்படுத்துவோர் சங்க கூட்டமைப்பு தலைவர் சோழந்தூர் பாலகிருஷ்ணன் மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் 5 ஆயிரத்து 500 ஏக்கர் பாசன பரப்பளவு கொண்ட பெரிய கண்மாய் ஆகும். இந்த ஆண்டு முன் கடன், முன் உரம் கொடுத்து அரசு உதவியதால் விவசாயிகள் நம்பிக்கையுடன் நெல் பயிரிட்டு உள்ளோம்.
மழையின்றி போனதால் பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக கூடிய நிலையில் உள்ளது. இந்த பயிர்களை காப்பாற்ற ஒரு முறை தண்ணீர் கிடைத்தால்போதும். கடைசி ஒரு தண்ணீர் கிடைத்தால் வளர்ந்த பயிர்களை காப்பாற்றிட முடியும்.
மனு
எனவே, வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் கணக்கில் உள்ள தண்ணீரை திறந்துவிட்டு ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். இதன்மூலம் வரும் தண்ணீரில் எஞ்சிய தண்ணீரை சிறுபாசன கண்மாய்களுக்கும் வழங்கி விவசாயிகளின் கவலையை போக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.