ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்-அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. தொடங்கி வைத்தனர்

ராசிபுரம்:
ராசிபுரம் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியில் 65 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு 2 அடுக்கு படுக்கை வசதி கொண்ட கட்டில்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
இங்கு தங்கி படிக்கும் மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிடும் வகையில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு எந்திரம் அமைக்கப்பட்டது. இந்த எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு 250 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மாணவர்களுக்கு வழங்கும்.
திறப்பு விழா
இந்த எந்திர திறப்பு விழா விடுதி அரங்கில் நடந்தது. சுத்திகரிப்பு எந்திரத்தை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுகந்தி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், அரசு கல்லூரி முதல்வர் பானுமதி, ஒன்றிய கவுன்சிலர் பாலச்சந்திரன், குறுக்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜூ, பிள்ளாநல்லூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம், பட்டணம் பேரூராட்சி துணைத் தலைவர் பொன்.நல்லதம்பி, ஒன்றிய பொருளாளர் ரவி என்கிற முத்துச்செல்வன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.