சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்
15 வேலம்பாளையம்- அனுப்பர்பாளையம்புதூர் சாலையில் கழிவு நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
கழிவு நீர்
திருப்பூர் 15 வேலம்பாளையம் அனுப்பர்பாளையம்புதூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரம் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கழிவுநீர் கால்வாயில் செல்லாமல் சாலையில் பாய்ந்து வருகிறது. கடந்த 1 மாதமாக சாக்கடை கழிவுநீர் நடுரோட்டில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் சாலையின் ஒருபுறம் கழிவுநீர் பாய்வதால் வாகன ஓட்டிகள் அனைவரும் சாலையின் மறுபுறம் ஒருவழிப் பாதையில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதேபோல் பல நாட்களாக இதே நிலை நீடிப்பதால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோரிக்கை
சாக்கடை கால்வாய் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் அவசியம் என்றாலும் கழிவுநீர் செல்வதற்கான மாற்று ஏற்பாடுகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செய்யாதது பொதுமக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது.
எனவே கழிவு நீர் சாலையில் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்