பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்காமல் வெளியேற்றப்படும் சாயக்கழிவால் பாதிக்கப்படும் நீர்நிலைகள்- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்காமல் வெளியேற்றப்படும் சாயக்கழிவால் பாதிக்கப்படும் நீர்நிலைகள்- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x

பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்காமல் வெளியேற்றப்படும் சாயக்கழிவால் பாதிக்கப்படும் நீர்நிலைகள்- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகம் 2 ஆயிரத்து 709 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சாய, சலவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளும் அடங்கும். இங்குள்ள சில சாய தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் முறைகேடாக சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக சாயக்கழிவுநீர் வெளியேற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மனிதனின் அத்தியாவசிய தேவையான குடிநீர் ஆதாரங்கள் முற்றிலுமாக மாசுபட்டு சிப்காட்டை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமானோர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டனர்.

சிப்காட்டை சுற்றியுள்ள பகுதிகள் மாசுபட்டதுடன் தற்போது ஈரோடு மாவட்டத்தின் மிகப்பெரிய குளமான 400 ஏக்கர் பரப்பளவில் உள்ள பாலதொழுவு குளமும் சாய நீரால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி சிப்காட் பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஓடைக்காட்டூர் குளமும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து சாய கழிவுகளால் நீர் நிலைகள் பாதிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறிய கருத்துகள் வருமாறு:-

"ஜீரோ டிஸ்சார்ஜ்"

சென்னிமலை அருகே ஈங்கூர் ஊராட்சிக்கு ட்பட்ட செங்குளத்தை சேர்ந்த காளான் சண்முகம்:-

எங்கள் பகுதியில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே முற்றிலுமாக பாதித்துவிட்டது. ஊரில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் பல நிறங்களில் சாய தண்ணீர் இருப்பதை காணலாம். சிப்காட் சாய தொழிற்சாலைகளில் இருந்து சாய கழிவுகளை முற்றிலுமாக சுத்திகரிப்பு செய்து "ஜீரோ டிஸ்சார்ஜ்" முறையில் அந்த தண்ணீரை தொழிற்சாலை நிர்வாகமே பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதுதான் விதி.

ஆனால் இதனை பின்பற்றாமல் சாய கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றி வருகின்றனர். இதனை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மட்டுமின்றி சாய தொழிற்சாலை உரிமையாளர்களே சாய கழிவுகளை வெளியேற்றாமல் இருக்க முன்வர வேண்டும்.

குழு அமைப்பு

வாய்ப்பாடியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி:-

பெருந்துறை சிப்காட்டில் சாய தொழிற்சாலைகள் மட்டுமின்றி இரும்பு, ரப்பர், பழைய டயர் ஆகியவற்றை உருக்குதல் ரசாயனம் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் இப்படி ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் சில சாய தொழிற்சாலைகள் சாயக்கழிவுகளை முறைகேடாக வெளியேற்றி வருகின்றனர். அதேபோல் சில தொழிற்சாலைகள் திடக்கழிவாகவும், திரவ கழிவாகவும், காற்று வழியாகவும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் நச்சுக்களை வெளியேற்றி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இனிமேலாவது வருங்கால சந்ததியினரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நாங்கள் குழு அமைத்து இரவு, பகலாக சிப்காட் பகுதியில் முறைகேடாக செயல்படும் தொழிற்சாலைகளை கண்காணித்து வருகிறோம். அதே சமயம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராடுகிறோம்

புஞ்சை பாலதொழுவு கிராமத்தை சேர்ந்த விவசாயி செ.ர.பிரபு:-

சாயக்கழிவுகள் மற்றும் நச்சு நிறைந்த திடக்கழிவுகள் வெளியேற்றுவதை சிப்காட் வளாகம் ஆரம்பித்த சமயத்திலேயே தடுத்திருக்க வேண்டும். அப்போது போதுமான விழிப்புணர்வு இல்லாததால் தடுக்க தவறி விட்டோம். பிற்காலத்தில் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என அப்போது யாருக்கும் தெரியவில்லை. தற்போது அதிக அளவில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட பிறகுதான் இப்போதைய இளைஞர்களான நாங்கள் களத்தில் இறங்கி சாயக்கழிவுகள் மற்றும் நச்சு நிறைந்த திடக்கழிவுகளுக்கு எதிராக இரவு, பகலாக போராடுகிறோம்.

இனியும் போராடாமல் இருந்தால் சிப்காட் பகுதி போல் சென்னிமலை மற்றும் பெருந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட ஏராளமான கிராமங்களில் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்படும் என்பதே உண்மை. அதனால் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும்.

பல கிராமங்கள் பாதிப்பு

சொக்கநாதபாளையத்தை சேர்ந்த கலைவாணி பாஸ்கர்:-

பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேறிய நீர் பாலதொழுவு குளத்தை அடைந்து அங்குள்ள நீர் பாதிக்கப்பட்டது. இந்த குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறினால் புதுப்பாளையம், எக்கட்டாம்பாளையம், எல்லைக்கிராமம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள தடுப்பணைகளில் சாயக்கழிவு நீர் கலந்து இதனை சுற்றியுள்ள கிராமங்கள் முற்றிலுமாக பாதிக்கும். ஏற்கனவே திருப்பூர் சாய கழிவுகளால் ஒரத்துப்பாளையம் அணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்பட்டது. ஒருபுறம் திருப்பூர் சாயக்கழிவு மற்றொருபுறம் சிப்காட் சாயக்கழிவு என இருபுறமும் சென்னிமலை பகுதியில் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாயக்கழிவுகள் எங்கிருந்தும் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வருங்காலத்தில் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story