குமாரபாளையம் பகுதிகளில் மழை வெள்ளம் பாதிப்பு: 100 வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது
குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த கன மழையினால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
குமாரபாளையம்
கனமழை
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் பெய்த கன மழையினால், சேலம் மாவட்டம் கத்தேரி, சடையம்பாளையம், ஓலப்பாளையம் பகுதிகளில் வடிகால் வசதி சரிவர இல்லாததால் வெள்ளம் சாலை வழியாக பெருக்கெடுத்து ஓடியது.
இதன் காரணமாக ஓலப்பாளையம் எம்.ஜி.ஆர். நகர், கம்பன் நகர், பாரதி வீதி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்திபுரம் வடக்கு, ராஜாஜி குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. குமாரபாளையம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதி நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றதால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து நகராட்சி நிர்வாகமும், வருவாய்த் துறையினரும் இணைந்து மழைநீர் வடிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குமாரபாளையம் உழவர் சந்தை முழுவதும் மழைநீர் தேங்கி நிற்பதால் வியாபாரிகள் வேறு இடத்தில் தங்கள் காய்கறிகள், கீரைகளை வைத்து விற்பனை செய்தனர். மழைநீர் சூழ்ந்து இருந்ததால் பொதுமக்கள் அங்கு செல்ல முடியாமல் தவித்தனர். இருப்பினும் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று காய்கறிகளை வாங்கும் சூழல் ஏற்பட்டது.
கலெக்டர் ஆய்வு
குமாரபாளையத்தில் வெள்ள பாதிப்புகள் பற்றி அறிந்த தாசில்தார் தமிழரசி, கிராம நிர்வாக அலுவலர்கள் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். மேலும் ஓலப்பாளையம் ஏரியில் மீன் வளர்பதற்காக ஏரி மதகுகள் அடைக்கப்பட்டு இருந்ததால் முறைப்படி தண்ணீர் வெளியேற முடியாமல் பக்கவாட்டில் உள்ள நீர்வழிப்பாதையில் பெருக்கெடுத்து ஓடியதால் இந்த பாதிப்பு ஏற்பட்டது என தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார்.
அப்போது குமாரபாளையம் நகரில் உள்ள நீர்வழி ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டியதன் விளைவாகவே மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. நீர்வழிப்பாதையில் ஆக்கிரமித்து உள்ளவர்கள் பலர் அரசு பட்டா பெற்று உள்ளனர். நீர்வழி பாதையில் பட்டா பெற்றிருந்தாலும் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி, சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுந்தர்ராஜன் ஆகியோர் குமாரபாளையம் பகுதியில் உள்ள ஓலப்பாளையம் ஏரியை பார்வையிட்டனர். அப்போது பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர்கள் (பள்ளிபாளையம் வடக்கு) குமரேஷ் (பள்ளிபாளையம் தெற்கு) செந்தில், குமாரபாளையம் நகர செயலாளர் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி, தட்டாங்குட்டை ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா செல்லமுத்து உள்பட பலர் உடன் இருந்தனர்.