மருதாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


மருதாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 Sep 2023 9:15 PM GMT (Updated: 23 Sep 2023 9:15 PM GMT)

அய்யம்பாளையம் மருதாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் 74 அடி உயரம் கொண்ட மருதாநதி அணை உள்ளது. இந்த அணைக்கு கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான தாண்டிக்குடி, பண்ணைக்காடு பாச்சலூர், கடுகுதடி, கோம்பை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது.

இந்த அணையின் மூலம் நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய 2 தாலுகாக்களில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சேவுகம்பட்டி ஆகிய 3 பேரூராட்சி பகுதிகளுக்கும், சித்தரேவு, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி ஆகிய 3 ஊராட்சிகளுக்கும் மருதாநதி அணை மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த 2 வாரத்திற்கு முன்பு அணையின் நீர்மட்டம் 60 அடியாக இருந்தது. மழை பெய்யாததால் நீர்வரத்து இல்லாமல் இருந்தது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன்காரணமாக தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதேபோல் அணையின் நீர்மட்டமும் உயர தொடங்கியது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் உயர்ந்து 64 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 33 கனஅடி வீதம் தண்ணீர் வரத்து உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Related Tags :
Next Story