ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பென்னாகரம்
தண்ணீர் திறப்பு
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. அதன்படி வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்தநிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நீர்வரத்தை அளவீடு செய்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
பரிசல் இயக்க தடை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அருவிகள், காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பரிசல்கள் இயக்கத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டதால் ஒகேனக்கல் பரிசல்துறை அருகே பரிசல்கள் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன.