பழுதான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் பழுதாகி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை
தளி
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் பழுதாகி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஸ் நிலையம்
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி வெளி மாவட்ட பஸ்களும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கிறது. இதன் காரணமாக பஸ் நிலையம் காலை முதல் இரவு வரையிலும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதன் காரணமாக பயணிகள் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து உள்ளது. அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் குடிநீர் வசதி இல்லாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
சீரமைக்க வேண்டும்
எனவே உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் செயல்படாமல் உள்ள குடிநீர் வழங்கும் எந்திரங்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.