வனவிலங்குகள் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர்
பொள்ளாச்சி, உலாந்தி வனச்சரகத்தில் வனவிலங்குகள் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, உலாந்தி வனச்சரகத்தில் வனவிலங்குகள் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வறண்ட நீரோடைகள்
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரக பகுதிகள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதிகளில் யானை, புலி, மான், காட்டெருமை, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள், அரிய வகை பறவை இனங்கள் மற்றும் தாவர இனங்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக வனப்பகுதி பசுமையாக மாறியது. இதன் காரணமாக வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் வனப்பகுதியில் கிடைத்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வனப்பகுதியில் உள்ள நீரோடைகள் வறண்டு வருகிறது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி சமவெளி பகுதிக்கு வரக் கூடும். இதை தடுக்க வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தண்ணீர் நிரப்பும் பணி
கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் காரணமாக வனப்பகுதி நீரோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது மழை பொழிவு இல்லாததால் நீரோடைகள் வறண்டு விட்டன.
இதன் காரணமாக வனவிலங்குகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனால் வனப்பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி, உலாந்தி வனச்சரக பகுதிகளில் உள்ள தொட்டிகளில் வாகனங்கள் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் தண்ணீர் காலியானதும் மீண்டும் தண்ணீர் ஊற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதை தவிர வால்பாறை மலைப்பாதையில் தண்ணீர் தொட்டி வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் போதுமானதாக உள்ளதா? என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.