பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தளி
உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு
ஆகிய கடவுள்கள் ஒருசேர ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்தகன்னிமார் மற்றும் நவகிரக சன்னதிகளும் உள்ளன.கோவிலில் மகாசிவராத்திரி, பிரதோஷம், கிருத்திகை, அமாவாசை, தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களில் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.மேலும் கோவிலுக்கு
வருகின்ற வழியில் படகு இல்லம், சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், திருமூர்த்திஅணை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.அவற்றை பார்வையிடவும் அணைப் பகுதியில் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழவும் மலைமீது உள்ள பஞ்சலிங்க அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காகவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர். இதனால் உடுமலை பகுதியின் சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலமாக திருமூர்த்திமலை விளங்கி வருகிறது.
இந்த சூழலில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்பட்டது. இதனால் அங்கு உற்பத்தியாகின்ற ஆறுகள் நீர்வரத்தை இழந்து விட்டதால் பஞ்சலிங்க அருவியிலும் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து விட்டது.இதனால் அருவியல் குளித்து மகிழலாம் என்ற உற்சாகத்தோடு திருமூர்த்தி மலைக்கு வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.அதைத் தொடர்ந்து மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிச் சென்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது.இதன் காரணமாக வனப்பகுதியில் உற்பத்தி ஆகின்ற ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் வெறுமனே காட்சி அளித்து வந்த பஞ்சலிங்க அருவி தற்போது நீர்வரத்தை பெற்றுள்ளது.இதனால் திருமூர்த்திமலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் உற்சாகத்தோடு அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். மேலும் வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன் கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவுகிறது.இதனால் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.