சிறுவாணி அணையின் நீர்மட்டம் 13 அடியாக குறைந்தது


சிறுவாணி அணையின் நீர்மட்டம்            13 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிறுவாணி அணையின் நீர்மட்டம் 13 அடியாக குறைந்தது

கோயம்புத்தூர்

கோவை

கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 13 அடியாக குறைந்தது. எனவே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

சிறுவாணி அணை

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவைக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அணையின் ஒரு பகுதியில் நீரேற்று நிலையத்தில் 4 வால்வுகள் உள்ளன. அதன் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க முடியும். ஆனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருவதால், அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது.

13 அடியாக குறைந்தது

அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 13 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக 4½ கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. அதில் கோவை மாநகர பகுதிக்கு 3.6 கோடி லிட்டரும் மீதமுள்ள குடிநீர் வழியோர கிராமங்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டது.

தற்போது அணையில் இருக்கும் தண்ணீரை வைத்து மே மாதம் 2-ம் வாரம் வரை குடிநீர் வினியோகம் செய்ய முடியும். மேலும் தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டதாலும், அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

தட்டுப்பாடு ஏற்படாது

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, பில்லூர் அணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பதால் கோவை மாநகர பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. இருந்தபோதிலும் சிறுவாணி குடிநீர் வினியோகிக்கும் 22 வார்டுகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு மாற்று ஏற்பாடு செய்து சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும். மேலும் மே மாதத்துக்குள் பில்லூர் 3-வது குடிநீர் திட்ட பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வந்து விடும் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றனர்.


Next Story