இன்று தண்ணீர் திறக்க வாய்ப்பு


இன்று தண்ணீர் திறக்க வாய்ப்பு
x
திருப்பூர்


காண்டூர் கால்வாயில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் முடிவடைந்தது. இதனால் இன்று(வெள்ளிக்கிழமை) தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தளி வாய்க்கால்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணை மூலமாக பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 152 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது.

இதற்காக நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் தளி வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 63 ஏக்கர் பழைய ஆயக்கட்டு நிலங்கள் பாசனம் பெறுகிறது. மேலும் சுற்றுப்புற கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

காண்டூர் கால்வாய்

பி.ஏ.பி. திட்டத்தின் உயிர் நாடியான காண்டூர் கால்வாய் கடந்த 1960- ம் ஆண்டு முதல் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. கால்வாய் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ளதால் மழைக் காலங்களில் நீர்வரத்து ஏற்படும்போது பாறைகள் மற்றும் மண் கால்வாயில் சரிந்து பக்கவாட்டு சுவர்களை சேதப்படுத்தி வந்தது.

சேதம் அடைந்த கரையை சீரமைக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்து புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் நீர் இழப்பு ஏற்படுவதும் தவிர்க்கப்பட்டது.

புனரமைப்பு பணி

இந்த சூழலில் விடுபட்ட பகுதியில் புனரமைப்பு பணி மேற்கொள்ள கடந்த 2021-ம் ஆண்டு ரூ.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக தொகுப்பு அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்த காரணத்தினால் ஆண்டின் 10 மாதங்கள் தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டது.

இதனால் கடந்த ஆண்டு 500 மீட்டர் நீளத்திற்கு மட்டுமே புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில் கடந்த ஏப்ரல் 27-ந்தேதி முதல் மீண்டும் கால்வாய் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டு 3 கிலோமீட்டர் நீளத்திற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் இரவு பகலாக மும்முரமாக நடைபெற்று வந்தது.

இன்று திறக்க வாய்ப்பு

இந்த நிலையில் கால்வாயில் புனரமைப்பு பணி நேற்று முன்தினம் நிறைவு அடைந்தது. இதையடுத்து நேற்று கால்வாயில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) கால்வாயில் தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வாறு திறக்கப்பட்டால் நாளை(சனிக்கிழமை) மாலை தண்ணீர் திருமூர்த்தி அணையை வந்தடையும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story