பரம்பிக்குளத்தில் இருந்து தூணக்கடவிற்கு தண்ணீர் திறப்பு


பரம்பிக்குளத்தில் இருந்து தூணக்கடவிற்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 22 July 2023 3:15 AM IST (Updated: 22 July 2023 3:16 AM IST)
t-max-icont-min-icon

4-ம் மண்டல பாசனத்திற்கு வழங்குவதற்கு பரம்பிக்குளத்தில் இருந்து தூணக்கடவு அணைக்கு தண்ணீர் திறந்து உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

4-ம் மண்டல பாசனத்திற்கு வழங்குவதற்கு பரம்பிக்குளத்தில் இருந்து தூணக்கடவு அணைக்கு தண்ணீர் திறந்து உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பரம்பிக்குளம் அணை

பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை உள்ளது. 72 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து தூணக்கடவு அணை வழியாக சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இங்கு மின் உற்பத்தி செய்த பின் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் வழங்குவதற்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து தூணக்கடவு அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நீர் இருப்பு வைப்பு

தற்போது 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 28.24 அடியாக உள்ளது. இந்த நிலையில் பி.ஏ.பி. 3-ம் மண்டல பாசனம் முடிந்து, 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதற்காக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. காண்டூர் கால்வாய் தூர்வாரும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் பரம்பிக்குளத்தில் இருந்து தூணக்கடவு அணைக்கு வினாடிக்கு 537 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. தூணக்கடவு அணையில் நீர் இருப்பு வைக்கப்பட்டு, பாசனத்திற்கு தேவைப்படும் போது திறக்கப்படும். இதற்காக காண்டூர் கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story