வைகை அணையில் இருந்து58-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு


வைகை அணையில் இருந்து58-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு
x

உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களை நிரப்பும் வகையில், வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

தேனி

வைகை அணை

தொடர்மழை எதிரொலியாக, ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முழுக்கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக ஏற்கனவே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் நிரம்பிய வைகை அணையில் இருந்து ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களை நிரப்பும் வகையில் 58-ம் கால்வாயில், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தினர்.

தண்ணீர் திறப்பு

இந்தநிலையில் வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து தேனி கலெக்டர் முரளிதரன், மதுரை கலெக்டர் அனீஸ்சேகர், எம்.எல்.ஏ.க்கள் மகாராஜன் (ஆண்டிப்பட்டி), சரவணன் (பெரியகுளம்), அய்யப்பன் (உசிலம்பட்டி) ஆகியோர் 58-ம் கால்வாய் மதகுகளை இயக்கி அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.

தற்போது அணையில் இருந்து 58-ம் கால்வாயில், வினாடிக்கு 150 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் கால்வாய் வழியாக சுமார் 40 கிலோமீட்டர் தூரம் பயணித்து, உசிலம்பட்டி பகுதியில் 58 கிராமங்களில் உள்ள 33 கண்மாய்களை சென்றடையும்.

இந்த தண்ணீர் மூலம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் 1,912 ஏக்கர் நிலமும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் 373 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும்.

நிலை நிறுத்த முடிவு

வைகை அணையின் நீர்மட்டம் 67 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே, 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும். இதனால் அணையின் நீர்மட்டத்தை 68 அடியில் நிலை நிறுத்த பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள், உசிலம்பட்டி சுற்றுவட்டார விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்


Next Story