அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு: கரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
அமராவதி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் கரூர் மாவட்டத்தில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. தற்போது நெல், கரும்பு, வாழை, பருத்தி, மஞ்சள், சேனைக்கிழங்கு, தென்னை உள்ளிட்டவைகளை விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மழை இல்லாத காரணத்தினாலும், கடும் வெயில் வாட்டி வருவதாலும் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.
இந்த நிலையில் பயிர்கள் வாடிய நிலையில் உள்ளது. இதனை அடுத்து விவசாயிகள் சார்பில் தண்ணீர் திறக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக முதல்-அமைச்சர் நேற்று முதல் வருகிற ஜூலை 9-ந்தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
1500 கன அடி
இந்தநிலையில் நேற்று காலை அணையின் நீர்மட்டம் 63 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஆற்றிற்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணையில் தற்போது 1957 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் கரூர் மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.