கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு


கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

நெகமம்,

செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தண்ணீர் திறப்பு

பரம்பிக்குளம், ஆழியாறு (பி.ஏ.பி.) திட்டத்தில் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொள்ளாச்சி, திருப்பூரில் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுற்று வாரியாக பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நெகமம் அருகே செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் 4-வது சுற்று தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

இதில் ஆண்டிபாளையம், கப்பிணிபாளையம், சேரிபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், வடக்குக்காடு, தேவணாம்பாளையம், செட்டியக்காபாளையம், கோதவாடி, பட்டணம், நல்லட்டிபாளையம், மாசநாயக்கன்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள 2,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

விவசாயிகள் மகிழ்ச்சி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் மழை பெய்ததால் கருகிய தென்னை மரங்கள் துளிர்விட தொடங்கியது. மேலும் விளைநிலங்களில் விவசாயிகள் உழவு செய்து கம்பு, சோளம், நிலக்கடலை, தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய், பொறியல் தட்டை, பச்சை மிளகாய் உள்பட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்தனர். தற்போது பயிர் விளைச்சல் தொடங்கி உள்ளது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பி.ஏ.பி. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் 7 நாட்களுக்கு தொடர்ந்து வரும். மேலும் தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் தண்ணீர் வருவதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story