கொடுமுடியாறு அணையில் தண்ணீர் திறப்பு


கொடுமுடியாறு அணையில் தண்ணீர் திறப்பு
x

பிசான சாகுபடிக்கு கொடுமுடியாறு அணையில் தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

பிசான சாகுபடிக்கு கொடுமுடியாறு அணையில் தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

கொடுமுடியாறு அணை

திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் கொடுமுடியாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 52.50 அடி ஆகும். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி அணையில் 49 அடிக்கு தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், பிசான சாகுபடிக்காக நேற்று கொடுமுடியாறு அணையில் இருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார்.

படலையார் கால்வாய், நம்பியாற்று கால்வாய், வள்ளியூரான் கால்வாய் ஆகியவற்றில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாங்குநேரி, ராதாபுரம் தாலுகாவின் உள்ள 44 குளங்களும், 5,781 ஏக்கர் விளைநிலங்களும் பயன் பெறும்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகம்மது ஷபிர் ஆலம், நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி, பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் களக்காடு தெற்கு ராஜன், நாங்குநேரி கிழக்கு ஆரோக்கிய எட்வின், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் பத்மா, செயற் பொறியாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் சபாநாயகர் அப்பாவு கூறுகையில், ''விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்'' என்றார்.


Next Story