சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்
நாமக்கல்லில் பலத்த மழை பெய்ததால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பலத்த மழை
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடையை மிஞ்சும் அளவுக்கு வெயில் பொதுமக்களை சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்றும் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதற்கிடையே நாமக்கல் நகரை பொறுத்த வரையில் மாலை 4 மணிக்கு பிறகு வானத்தில் கருமேகம் திரண்டன. மாலை 5.30 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழையாக நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்க்க முடிந்தது.
சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது
குறிப்பாக சேலம் சாலை, பரமத்தி சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். பெரும்பாலான வாகன ஒட்டிகள் ஆமை வேகத்தில் வாகனங்களை ஓட்டி செல்வதை பார்க்க முடிந்தது. இதேபோல் நாமக்கல் குட்டைதெரு உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இந்த மழை சாரல்மழையாக இரவு 8 மணிக்கு மேலும் நீடித்ததால், இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. நேற்று மாலை சுமார் 5.30 மணி அளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. மாரியம்மன் கோவில் நுழைவாயில் முதல் கோவில் வரை போடப்பட்டு இருந்த திருவிழா கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
மழை நின்றவுடன் மீண்டும் அப்பகுதியில் வியாபாரம் சூடு பிடித்தது. ஆனால் சிறுவர், சிறுமிகளுக்கான ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டுகள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.