கரந்தமலை சிற்றருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
நத்தம் அருகே கரந்தமலை சிற்றருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நத்தம் அருகே கரந்தமலை வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான மலைக்கிராமங்களும் உள்ளன. குறிப்பாக கரந்தமலை அடிவாரத்தில் உள்ள குட்டுப்பட்டி, உலுப்பக்குடி, மணக்காட்டூர் ஆகிய கிராமங்களை ஒட்டி 3 சிற்றருவிகள் உள்ளன. இதில், குட்டுப்பட்டி மற்றும் உலுப்பக்குடி சிற்றருவிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளன. மழைக்காலங்களில் இந்த அருவிகளுக்கு நீர்வரத்து ஏற்படும். மற்ற நாட்களில் குறைந்த அளவு தண்ணீர் விழும்.
இந்த அருவிகளில் மூலிகை கலந்த தண்ணீர் விழுவதாக கூறப்படுகிறது. இதனால் ஏராளமானோர் அருவிகளுக்கு நீராடுவதற்காக வருகின்றனர். மேலும் இந்த அருவிகளில் விழும் தண்ணீர் கரந்தமலை தீர்த்தம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில் விழாக்களுக்கு இந்த தீர்த்தம் கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல் ஆண்டுதோறும் நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரந்தமலை சிற்றருவிகளில் நீராடி செல்வது வழக்கம்.
இந்தநிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் கரந்தமலை பகுதியிலும் கடந்த 2 வாரங்களாக மழை பெய்தது. இதனால் கரந்தமலை சிற்றருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, தற்போது அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகள், கரந்தமலை அருவிகளுக்கு சென்று நீராடி வருகின்றனர்.