குடிநீர் குழாய்களை முழுமையாக சோதனை செய்ய வேண்டும்


குடிநீர் குழாய்களை முழுமையாக சோதனை செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 6:45 PM GMT)

கழிவுநீர் கலந்த தண்ணீா் வினியோகம் செய்யப்படுவதால் குடிநீர் குழாய்களை முழுமையாக சோதனை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறையினர் உத்தரவிட்டனர்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் பொதுமக்களுக்கு கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் பொதுமக்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. நெல்லிக்குப்பம் நகராட்சியில் போதுமான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இல்லாத காரணத்தால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ஹரிகிருஷ்ணன், தொற்று நோய் நிபுணர் ரதினிஷ்னி, சுகாதார ஆய்வாளர் ரமேஷ், துப்புரவு ஆய்வாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் விஜயலட்சுமி நகர், கந்தசாமி தெரு, ராமு தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வீடுகளுக்கு கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதா என சரிபார்த்தனர்.

குழாய் உடைப்புகளை சரிசெய்ய வேண்டும்

தொடர்ந்து ஜம்புலிங்கம் பூங்காவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குளோரின் பயன்படுத்தி பொதுமக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வழங்கப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்கு குடிநீரை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நெல்லிக்குப்பம் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கழிவுநீர் கலந்த குடிநீர் வருவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வரும் நிலையில், அதை தவிர்க்க என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை நகராட்சி அதிகாரிகளிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டறிந்தனர். குடிநீரில் கழிவு நீர் கலக்காமல் இருக்க அடிக்கடி பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள குழாய்களை முழுமையாக சோதனை செய்து, அதில் உடைப்பு ஏதும் இருந்தால் அதனை உடனே சரிசெய்து பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள், குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏதும் உள்ளதா என சரிபார்க்க தொடங்கினர். இந்த ஆய்வின் போது கவுன்சிலர் சத்யா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story