படகு இல்லத்தில் மாசடையும் தண்ணீர்


படகு இல்லத்தில் மாசடையும் தண்ணீர்
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை படகு இல்லத்தில் மாசடைந்த தண்ணீரால் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.

கோயம்புத்தூர்

வால்பாறை,

வால்பாறை படகு இல்லத்தில் மாசடைந்த தண்ணீரால் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.

படகு இல்லம்

வால்பாறை புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு 13-ந் தேதி பூமி பூஜை போடப்பட்டு, படகு இல்லம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு படகு இல்லத்தின் பணிகள் முழுமையாக நிறைவு பெறாத நிலையில், அவசர கதியில் படகு இல்லம் திறக்கப்பட்டது. தொடர்ந்து படகுகள் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. ஆனால், இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படவில்லை.

இதற்கு பொதுப்பணித்துறை, வனத்துறை உள்பட பல்வேறு துறைகளிடம் இருந்து முறையான அனுமதி பெறாதது, உரிய பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்காதது போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன. இதனால் படகு இல்லம் தொடர்ந்து பயன்பாடற்ற நிலையில் கிடக்கிறது.

கொசுக்கள் உற்பத்தி

தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டதால், வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. எனவே, படகு இல்லத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இதற்கிடையில் படகு இல்லம் செயல்படாமல் உள்ளதால், அங்குள்ள தண்ணீரில் ஆகாயத்தாமரை படர்ந்து வருகிறது. மேலும் பச்சை நிறத்துக்கு மாறி தண்ணீரும் மாசுபட்டு வருகிறது. இதன் காரணமாக அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதன் காரணமாக அவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

நோய் பரப்பும் இடம்

இதுகுறித்து வால்பாறை பொதுமக்கள் கூறியதாவது:-

படகு இல்லம் அமைக்கப்பட்டு, 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அங்கு முறையான பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுவது இல்லை. இதன் காரணமாக தண்ணீர் மாசுபட்டு வருகிறது.

இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து, தொற்று நோய்களை பரப்பி வருகிறது. பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட படகு இல்லம், தற்போது நோய் பரப்பும் இடமாக மாறிவிட்டது. இதற்கு உரிய தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story