சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை
உடுமலை பகுதியில் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
தளி
உடுமலை பகுதியில் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
நககராட்சி கூட்டம்
உடுமலை நகராட்சியில் நகர மன்ற கூட்டம் அலுவலக கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் மத்தீன் தலைமை வகித்தார். கூட்டத்தில் 50 திர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்றது.
அப்போது நகர மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:-
மழைநீர் வடிகால்கள் பராமரிப்பு செய்யப்படாமல் உள்ளது. இதனால் மழை பெய்யும் போது தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. நகர நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுமக்கள் பங்களிப்புடன் மன்ற உறுப்பினர்களே நிறைவேற்றிக் கொள்கிறோம். 33 வார்டுகளிலும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. சீரான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது அமைக்கப்பட்டு வரும் தார் சாலைகள் தரமற்றவையாக உள்ளது. தரமான சாலைகள் அமைக்க வேண்டும். மாற்றி அமைக்கப்பட்ட வரியை முறைகேடாக குறைத்து கொடுத்து விடுகின்றனர். மேலும் பழைய நகராட்சி கட்டிடத்தில் உள்ள பர்னிச்சர் பொருட்களை என்ன ஆனது என்று தெரியவில்லை. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
தினசரி சந்தையில் இடிக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்து 40 டன் வரையிலும் கம்பிகள் எடுத்துச் செல்லப்பட்டு உள்ளது. ஆனால் 11½ டன் மட்டுமே எடுத்து செல்லப்பட்டு உள்ளது என்றும் இது குறித்து நடவடிக்கை எடுக்க மனு அளிக்கப்பட்டு உள்ளது என்று நிர்வாகம் பதில் தெரிவித்தது.
அரசு அதிகாரிகளும் நகர மன்றத்தில் உள்ள ஒரு சிலரும் நிர்வாக தொய்வுக்கு வழி வகுக்கின்றனர். இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இவ்வாறு காரசார விவாதம் நடைபெற்றது.