ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு


ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
x

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

தண்ணீர் திறப்பு

தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியான பெங்களூருவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்தநிலையில் கெலவரப்பள்ளி அணையின் வலது மற்றும் இடது புற பிரதான கால்வாய்கள் வழியாக முதல் போக பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, ஓசூர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தனர். இதன்மூலம் ஓசூர் மற்றும் சூளகிரி தாலுகாக்களில் உள்ள தட்டகானப்பள்ளி, பூதிநத்தம், பெத்த முத்தாலி, முத்தாலி, அட்டூர், காமன்தொட்டி, தின்னூர், கோனேரிப்பள்ளி, அட்ட குறுக்கி, நல்லகான கொத்தபள்ளி உள்ளிட்ட 22 ஊராட்சிகளில் உள்ள 8 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்கள் பாசன வசதி பெறும்.

வினாடிக்கு 88 கனஅடி

அணையின் நீர் இருப்பு மற்றும் அணைக்கு வரும் நீர்வரத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படும். அதன்படி முதல் 10 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும். பின்னர் அடுத்த 5 நாட்கள் நிறுத்தப்பட்டு, 8 நனைப்புகளுக்கு தண்ணீர் வழங்கப்படும்.

வலதுபுற பிரதான கால்வாயில் வினாடிக்கு 26 கனஅடியும், இடது புற பிரதான கால்வாயில் வினாடிக்கு 62 கனஅடியும் என மொத்தம் வினாடிக்கு 88 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படும்.

ஒத்துழைப்பு

விவசாயிகள் பாசனத்துக்கு திறந்து விடப்படும் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்றும், நீர் பங்கீட்டு பணிகளில் நீர்வள ஆதாரத்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, துணை மேயர் ஆனந்தய்யா, தாசில்தார் கவாஸ்கர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story