மேட்டூர் அணை நீர்மட்டம் 112 அடியை எட்டியது: காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


மேட்டூர் அணை நீர்மட்டம் 112 அடியை எட்டியது:  காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியை எட்டி உள்ள நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சேலம்

மேட்டூர்,

மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த மே மாதம் 24-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது.

இதையடுத்து கடந்த 8-ந் தேதி முதல் இந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது.

112 அடியாக உயர்வு

இதன் காரணமாக கடந்த 5 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. அணைக்கு அதிகபட்சமாக வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி வரை தண்ணீர் வந்தது. அவ்வப்போது அணைக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் மாறி மாறி வந்து கொண்டுள்ளது.

நேற்று காலை 8 மணிக்கு அணையின் நீர்மட்டம் 110.30 அடியாக இருந்தது.

இரவு 112 அடியாக உயர்ந்தது. அணை நீர்மட்டம் தொடா்ந்து உயர்ந்து கொண்டு வரும் நிலையில், அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கும் அளவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

அதன்படி, அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் நேற்று மாலை 4.30 மணி முதல் வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அணைக்கு வினாடிக்கு 73 ஆயிரத்து 29 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் மேட்டூர் அணையை ஒட்டி அமைந்துள்ள அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது.

இந்த மின் நிலையங்கள் வழியாக வெளியேறும் தண்ணீரை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி 200 மெகாவாட் மின்சாரம் இந்த 2 மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story