பரம்பிக்குளத்தில் இருந்து திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறப்பு


பரம்பிக்குளத்தில் இருந்து திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறப்பு
x

பரம்பிக்குளத்தில் இருந்து திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பரம்பிக்குளத்தில் இருந்து திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

தண்ணீர் திறப்பு

பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை அமைந்து உள்ளது. அணை பராமரிப்பு, நீர்வரத்து கணக்கீடுதல், தண்ணீர் திறப்பு உள்ளிட்ட பணிகள் தமிழக பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக 72 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் முழுகொள்ளளவை எட்டியது. இதற்கிடையில் காண்டூர் கால்வாயில் நல்லாறு பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பரம்பிக்குளத்தில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதன் காரணமாக பரம்பிக்குளம் அணை நிரம்பியதும் பாதுகாப்பு கருதி உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி 2-ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பரம்பிக்குளத்தில் இருந்து சுரங்கபாதை வழியாக சர்க்கார்பதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அங்கு மின் உற்பத்தி செய்த பின் 49 கிலோ நீளமுடைய காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல், உதவி பொறியாளர் செந்தில்குமார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மின் உற்பத்தி

காண்டூர் கால்வாயில் நல்லாறு பகுதியில் ரூ.72 கோடி செலவில் கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக பரம்பிக்குளத்தில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. வருகிற 26-ந் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் காண்டூர் கால்வாயில் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி திருமூர்த்திக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

திருமூர்த்தி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். சர்க்கார்பதியில் மின் உற்பத்தி செய்த பின் காண்டூர் கால்வாய் வழியாக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில் 12 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story