பில்லூர் அணையில் இருந்து 3-வது நாளாக தண்ணீர் வெளியேற்றம்


பில்லூர் அணையில் இருந்து 3-வது நாளாக தண்ணீர் வெளியேற்றம்
x

பில்லூர் அணையில் இருந்து 3-வது நாளாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் உயராமல் இருக்க அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்,

பில்லூர் அணையில் இருந்து 3-வது நாளாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் உயராமல் இருக்க அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை உள்ளது. இதன் நீர்மட்ட உயரம் 100 அடியாகும். பில்லூர் அணையில் 2 மின் எந்திரங்களை இயக்குவதன் மூலம் 24 மணி நேரத்தில் 100 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் பவானி ஆற்று நீராக பாய்ந்து ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையை சென்றடைகிறது.

தொடர் மழை காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் நீலகிரி மாவட்ட அணைகளில் மின் உற்பத்திக்கு பின்னர் வெளியேறும் தண்ணீர் பில்லூர் அணைக்கு வருகிறது. கடந்த 14-ந் தேதி பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

24 மணி நேரமும் கண்காணிப்பு

இந்தநிலையில் நேற்று காலை 8 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்மட்டம் 97 அடியில் ஒரே சீராக வைத்திருக்க, அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. காலை 11 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்ததால், 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் 3-வது நாளாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இதனால் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு, அணையின் நீர்மட்ட உயரம், அணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவை கணக்கிடுவது மற்றும் அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நீர்மட்ட உயரம் 97 அடிக்கு மேல் அதிகாமால் இருக்கவும் மின்சார வாரிய செயற்பொறியாளர் பி.சிவக்குமார், உதவி பொறியாளர் சிவக்குமார் மற்றும் உதவி பொறியாளர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் அணை பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அணை நிலவரம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படடு வருகிறது. இதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


1 More update

Next Story