மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு வரவில்லை- விவசாயிகள்புகார்


மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு வரவில்லை- விவசாயிகள்புகார்
x

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு இன்னும் வந்து சேரவில்லை என பொதுப்பணித்துறை அதிகாரியிடம் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் புகார் அளித்தனர்.

திருச்சி

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு, மாநிலத் துணைத்தலைவர் மேகராஜன் மற்றும் விவசாயிகள் திருச்சி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் (நீர்வள ஆதாரத்துறை) ராமமூர்த்தியிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு 48 நாட்கள் ஆகிறது. ஆனால் முசிறி தாலுகாவில் இதுவரை மேட்டு வாய்க்கால், பள்ள வாய்க்கால், கட்டளை வாய்க்கால், வடகரை வாய்க்கால், காட்டு வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களுக்கு இதுவரை தண்ணீர் சென்றடையவில்லை. குறுவை சாகுபடி தொடங்கிய நிலையில் விவசாய பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. அதேபோன்று ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள மருதாண்டாகுறிச்சி வாய்க்காலுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை. அனைத்து பகுதிகளிலும் கடைமடை வரை தண்ணீர் செல்ல மேட்டூர் அணையில் இருந்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story