ஓடைபுறம்போக்கு ஆக்கிரமிப்பால் பாதிப்பு


ஓடைபுறம்போக்கு ஆக்கிரமிப்பால் பாதிப்பு
x

ஓடைபுறம்போக்கு ஆக்கிரமிப்பால் பாதிப்பு

திருப்பூர்

திருப்பூர்,

திருப்பூர் வீரபாண்டியில் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

ஓடைபுறம்போக்கு ஆக்கிரமிப்பு

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வீரபாண்டி நத்தக்காட்டுதோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், 'திருப்பூர் மாநகராட்சி 54-வது வார்டு, ஜீவாநகர் பகுதியில் ஓடை புறம்போக்கில் 1¾ ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறார்கள். ஆக்கிரமிப்பில் வசிப்பவர்களில் சிலர் விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதுடன், காலி மதுபாட்டில்களை உடைத்து வீசி வருகிறார்கள். பொதுமக்கள் செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ளவர்களை உடனடியாக அகற்றி, பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

இந்து பரிவார் கூட்டமைப்பினர் அளித்த மனுவில், 'திருப்பூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள், அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவை மதிக்காமல் செயல்படுகிறது. அந்த பள்ளிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கவும், அரசு அறிவித்த நாட்களில் மற்றும் நேரத்தில் மட்டுமே பள்ளிகளை செயல்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

நலத்திட்ட உதவிகள்

ஊத்துக்குளி ஆலாம்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் மூர்த்தி அளித்த மனுவில், 'ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொது நல மனுக்கள் மீது பதில் தெரிவிக்காமல் உள்ளனர். இதுகுறித்து கலெக்டரிடம் மனு கொடுத்தேன். அதுபற்றி அறிந்ததும் அதிகாரிகள் என்னை மிரட்டுகிறார்கள். எனவே பொதுமக்கள் அளித்துள்ள நிலுவை மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

கூட்டத்தில் 637 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் தாட்கோ மூலமாக 10 பேருக்கு தூய்மைப்பணியாளர் நல வாரிய அடையாள அட்டை, இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ரூ.7 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் மானியத்துடன் காருக்கான சாவியை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story