மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு:தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதுஎடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் கே.என்.நேரு பதில்


மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு:தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதுஎடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் கே.என்.நேரு பதில்
x

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தாலும், தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு, அமைச்சர் கே.என்.நேரு பதில் தெரிவித்துள்ளார்.

சேலம்

சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தாலும், தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு, அமைச்சர் கே.என்.நேரு பதில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பேட்டி

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு டிசம்பர் மாதம் 17-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடிநீர் தேவையை பொறுத்தவரையில் செம்பரம்பாக்கம் ஏரி தற்போது நிரம்பி உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து கடலுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. சென்னை மிக, மிக பாதுகாப்பாக இருக்கிறது. மேலும், சென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில் குடிநீருக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது

அதேபோன்று, கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் இன்னும் 15 நாட்களுக்குள் குடிநீர் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, கன்னியாகுமரி மாவட்டங்களை பொறுத்தவரை ஏற்கனவே ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்புகள் மற்றும் பழுதுகளை அலுவலர்கள் உடனுக்குடன் சீரமைத்து வருகின்றனர். சீரான குடிநீர் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது அலுவலர்கள் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் குடிநீர் பிரச்சினைக்கு இடமில்லை. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைவாக உள்ளது. இருப்பினும் காவிரி ஆற்றை குடிநீர் ஆதாரமாக கொண்ட மாவட்டங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மேட்டூர் அணையில் தேவையான குடிநீர் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தாலும் தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.

வானிலை நிபுணர்கள்

தாமிரபரணியில் மழை குறைந்த காரணத்தால் ஒரே ஒரு நாள் வறண்ட நிலை ஏற்பட்டது. ஆனாலும், மறுநாளே மழை பெய்ததால் தாமிரபரணி பகுதியில் முழுமையாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வானிலை நிபுணர்கள் குறிப்பிடுகையில், தென்மேற்கு பருவமழை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மட்டுமே பெய்யாமல் உள்ளது எனவும், மற்ற இடங்களில் தென்மேற்கு பருவமழை 10 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்கு மேல் இருக்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் முழுமையான மழைப்பொழிவு இருக்கும் எனவும் வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, மழை பெய்யாமல் இருந்தாலும், இன்னும் ஓராண்டு காலத்திற்கு தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது எந்த இடத்திலும் இருக்காது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோர் காவிரி நீர் பெறுவது தொடர்பாக முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு நமது முதல்-அமைச்சர், ஏற்கனவே இதற்கென கூட்டங்களை நடத்தி அலுவலர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

எடப்பாடி பழனிசாமிக்கு பதில்

முன்னதாக சேலத்தில் நடந்த அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.


Next Story